நம் நாட்டின் மொத்த எரிபொருள் தேவையில் வெறும் 20 சதவிகித்தை மட்டுமே உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பெட்ரோல் மூலம் சமாளிக்கப்படுகிறது. எஞ்சியுள்ள 80 சதவிகிதம் பெட்ரோலை ஈரான், இராக், குவைத், சவூதி அரேபியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். இதனால், வர்த்தகப் பற்றாக்குறையும், நடப்பு கணக்குப் பற்றாக்குறையும் அதிகரித்து பொருளாதார வளர்ச்சி பாதிக்கிறது.
இது ஒருபுறம் இருக்க, தேவைப்பாடும் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 10 சதவிகிதம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலை நீடித்தால் இன்னும் 20 ஆண்டுகளில் எண்ணெய் வயல்கள் வற்றி பெட்ரோல் உற்பத்தி படிப்படியாகக் குறைந்து விடும் என்று வல்லுநர்கள் சுட்டிக்காட்டி வருவது கவனிக்கத்தக்கது. மேலும், அடிக்கடி பெட்ரோல் விலையேற்றத்தால் வாழ்க்கை மீதான நம்பிக்கையை மக்களும் கொஞ்சம் கொஞ்சமாக இழக்கின்றனர் என்பதே நிதர்சன உண்மை.
சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு அதிகப் பெட்ரோலியப் பொருள்கள் இறக்குமதியால கடும் நிதிச் சுமைக்கு உள்ளாகி பொருளாதாரச் சீர்கேட்டை சந்தித்த பிரேசில், மாற்று எரிபொருளாக எத்தனாலைப் பயன்படுத்தத் தொடங்கியது முதல் நிதி நெருக்கடியில் இருந்து தப்பித்துள்ளது என்பது வரலாறு. இதேபோல் வல்லரசான அமெரிக்காவும் கணிசமான எத்தனால் பயன்பாட்டுக்கு மாறிவருகிறது. மேலும் அண்மைக் காலமாக ஆப்பிரிக்கா, கரீபிய நாடுகளும் எத்தனால் உற்பத்தியில் இறங்கியுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
எத்தனால் என்கிற விவசாயப் பொருள்களில் இருந்து பெறப்படும் ஒரு வகையான ஹைட்ரோ கார்பன், ஆல்கஹால் வகையைச் சார்ந்தது. எத்தனால் புதுப்பிக்கக்கூடிய எரிசக்தி; என்றுமே வற்றாது. எனவே, இது சிறந்த எரிபொருள் மாற்றாக நிச்சயம் இருக்கும். எத்தனால் கலந்த பெட்ரோல் அதிகப்படியான ஆக்ஸிஜனை சுற்றுப்புறத்தில் வெளியிடுகிறது. மாசு படிந்த கார்பன் வெளியேற்றத்தையும் குறைக்கிறது.
கரும்பு, மக்காச்சோளம், உருளைக் கிழங்கு, குச்சிக் கிழங்கு, சில வகையான பாசிகளில் இருந்தும் எத்தனால் தயாரிக்கப்படுகிறது. இதைப் பெட்ரோலுக்கு பதிலாக மாற்று எரிபொருளாகப் பயன்படுத்தலாம். பெட்ரோலுடன் குறிப்பிட்ட விகிதத்திலும் கலந்து பயன்படுத்தலாம். இன்னும் சொல்லப்போனால் இது பெட்ரோலைவிடச் சிறந்தது எனலாம். "மொலாஸஸ்' எனப்படும் கழிவுகளிலிருந்து இதைப் பெருமளவில் உற்பத்தி செய்ய முடியும் என்பதால் சுற்றுச்சூழல் மாசுபாட்டையும் பெருமளவு குறைக்க முடியும்.
இப்போது சுமார் 560 சர்க்கரை ஆலைகள் உள்ளன. சர்க்கரை உற்பத்திக்கு இந்த ஆலைகள் அவசியம்தான். எனவே, இப்போதுள்ள ஆலைகளை தொந்தரவுக்கு உள்படுத்தாமல், புதிய ஆலைகளை நிறுவி எத்தனால் உற்பத்தி செய்யலாம்.
சுதேசி எரிபொருளான எத்தனால், சூரியன், நிலம், நீர், காற்று ஆகியவை நிலைத்திருக்கும் வரை கிடைத்துக் கொண்டேதான் இருக்கும். எத்தனால் பயன்பாட்டுக்கு வந்துவிட்டால் இப்போதைய எரிபொருள் விலை பாதியாகக் குறையும். விளை நிலங்கள் "விலை' நிலங்களாக மாறாமல் தடுக்கப்படும். மேலும், வாகன எரிபொருள் நுகர்வில் தன்னிறைவு பெறலாம். எண்ணெய் வள நாடுகளின் போக்கை அனுசரித்தே அயல்நாட்டுக் கொள்களைகளை வகுப்பதும் மாறும்! ஒரு காலகட்டத்தில் வெளிநாடுகளிடம் கை ஏந்தும் நிலை அறவே குறையும். எத்தனால் பயன்பாடு அதிகரித்தால் கரும்பு விவசாயிகளுக்குப் பெருமளவு பொருளாதாரப் பயன்கள் கிடைக்கும். அவர்களின் வாழ்க்கைத் தரம் உயரும்.
எத்தனால் பயன்படுத்தி இயக்கப்படும் வாகனங்களின் விரைவு சக்தி குறையும் என்ற புகார் இருந்து வருகிறது. அதிவேகமாக முன்னேற்றம் அடைந்து வரும் ஆட்டோமொபைல் துறையின் தொழில்நுட்ப ஆராய்ச்சி மேம்படும் போது இதற்கும் தீர்வு கிடைக்கும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். பெட்ரோலுடன் எத்தனாலைக் கலந்து பயன்படுத்த ஆட்டோ மொபைல் உலகம் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளது. அமைப்புகள் போராடுவதும், பிரகடனங்களை வெளியிட்டும் என்ன பயன். இதை நடைமுறைப்படுத்துவது அரசின் கையில்தானே உள்ளது. வேண்டும் எத்தனால்..! வேண்டும் எத்தனால்..
No comments:
Post a Comment